பொறியியல் படிப்பில் மாண வர் சேர்க்கைக்கான கலந் தாய்வு, செப்.17-ம் தேதி தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பிரிவில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கி ஆக.24-ம் தேதி நிறைவு பெற்றது. இதில், ஒரு லட்சத்துக்கு 74 ஆயிரத்து 930 மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர். அரசுப் பள்ளி மாணவர்கள் 22,671 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், கலந்தாய்வுக்கான அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதில், கலந்தாய்வுக்கு தகுதிபெறும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்.14-ம் தேதி வெளியிடப்படும். பொறியியல் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி, அவர்களுக்கு சிறப்புப் பிரிவில் கலந்தாய்வு நடத்தப்படும்.
அதன்படி, சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு செப்.17 முதல் 24-ம் தேதி வரையும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்.27 முதல் அக்.17-ம் தேதி வரையும் நடத்தப்படும். துணை கலந்தாய்வு அக்.19-ம் தேதியும், எஸ்சி, எஸ்டி பிரிவு கலந்தாய்வு அக்.24-ம் தேதியும் நடக்கும். அக்.25-ம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.