6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவர் களுக்கு ஆங்கில இலக்கண பாடம், ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

அனைத்து ஆசிரியர்களும் ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய கால அட்டவணை வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் வகுப்புகள் நடத்த வேண்டும். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சூழ்நிலைக்கு ஏற்ப கால அட்டவணை தயாரித்து வகுப்புகள் நடத்தலாம். அரசுப் பள்ளிகளில் அதிகமான மாணவர் சேர்க்கை இந்த கல்வியாண்டில் நடைபெற்றுள்ளது. இதனை தக்க வைத்துக்கொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

கல்வி தொலைக்காட்சி கால அட்டவணை தலைமை ஆசிரியர் அறை மற்றும் தகவல் பலகையில் இடம்பெற வேண்டும். மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கற்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் 75 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஸ்மார்ட் போன் வசதி இல்லாத மாணவர்களிடம் சாதாரண அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கல்வி தொலைக்காட்சி மூலம் அவர்கள் கற்கும் பாடம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

வாட்ஸ் அப் குழு வழியாக வினாக்கள் அனுப்பி, சிறு தேர்வுகள் நடத்தப்பட்டு, மதிப்பீடு செய்து, மதிப்பெண் பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தேர்வுகள் வைக்கப்பட்டு, மதிப்பீடு செய்ய வேண்டும். 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில இலக்கண பாடம், ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்க வேண்டும். என்எம்எம்எஸ், டிரஸ்ட் தேர்வுகளில் அதிகமான மாணவர்கள் பங்கேற்று பயன் பெற பயிற்சி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.