எஞ்சாயி எஞ்சாமி பாடல் வெற்றியில் தான் புறக்கணிக்கப்படுவதாக பகிர்ந்திருந்த பாடகர் அறிவுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிலளித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு எஞ்சாயி எஞ்சாமி சுயாதீன பாடல், இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் தயாரிப்பில் பாடகர்கள் அறிவு, தீ குரலில் வெளியாகியது. இப்பாடல் வெளியானது முதலே இணையத்தில் டிரெண்டாகி பெரும் வெற்றி பெற்றது. இதுவரை இப்பாடலை 42 கோடிக்கும் அதிகமானவர்கள் யூடியூப்பில் கண்டுகளித்துள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அப்பாடலை பாடகி தீ பாடி அசத்தியிருந்தார். எனினும் இப்பாடலின் முக்கிய அங்கமாக கருதப்படும் சுயாதீன பாடல் கலைஞரான அறிவு, செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பலரும் எஞ்சாயி எஞ்சாமி பாடலின் வெற்றிக்கு காரணமாகி இருந்த அறிவு புறக்கணிப்படுகிறாரா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழும்பியிருந்தனர். இந்த நிலையில், இன்று காலை பாடகர் அறிவு தான் புறக்கணிக்கபடுவது குறித்து இன்ஸ்டா பதிவில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவு வைரலானது.

இந்த நிலையில், அறிவின் பதிவுக்கு விளக்கமளிக்கும் வகையில் சந்தோஷ் நாராயணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில். “’ எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் உடனான எனது பயணத்தைப் பற்றி கூற விரும்புகிறேன். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார். இதனைத் தொடர்ந்து நான், தீ, அறிவு ஒருவர் மீது ஒருவர் வைத்த மதிப்புடன் இதில் இணைந்து பணியாற்றினோம்.

பாடலை தீயும், அறிவும் பாடினார்கள், பாடல் எப்படி அமைய வேண்டும் என்பதிலும் இருவரும் பங்கெடுத்தார்கள். இதில் தீ பாடிய வரிகளுக்கான பாடல் மெட்டை அவரே உருவாக்கினார். பிற வரிகளுக்கான மெட்டை நான் உருவாக்கினேன். அறிவு பாடிய வரிகளுக்கான மெட்டையும் நான் உருவாக்கி இருந்தேன்.

இப்பாடலின் வரிகளுக்கு அறிவுடன் இணைந்து நிறைய நேரம் செலவிட்டேன். பாடலில் இடம்பெற்றிருந்த ஒப்பாரி வரிகளுக்கு அரக்கோணம் பகுதி சுற்று வட்டாரத்தில் தாத்தாக்களும், பாட்டிகளும் உதவினர். அவர்களின் பங்களிப்புக்கு மதிப்பளித்த அறிவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ’எஞ்சாயி எஞ்சாமி’ பாடலை ஒட்டு மொத்தமாக முடிக்க நாங்கள் 30 மணி நேரம் எடுத்துக் கொண்டோம். பாடல் பதிவு செய்யும்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். இப்பாடலின் மூலம் வந்த வருமானம் அனைத்தையும் நான், தீ, அறிவு சமமாகவே பங்கிட்டு கொண்டோம் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறேன்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் நிகழ்வில் அமெரிக்கப் பயணம் காரணமாக அறிவு பங்கேற்க இயலாது என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நாங்கள் தெரிவித்துவிட்டோம்.

நான் எப்போதும் அறிவை சிறந்த கலைஞர் என்றே உணர்கிறேன். நான் எப்போதும் எனது படைப்பு தளத்தை ஒடுக்கப்பட்டவர்களுக்காவே பயன்படுத்தி கொண்டிருக்கிறேன். இம்மண்ணின் கலைக்கும், கலைஞர்களுக்கும் என்னிடம் அன்பு மட்டுமே உள்ளது. ’எஞ்சாயி எஞ்சாமி’ குறித்து இப்பாடலில் பங்கெடுத்த கலைஞர்கள், என்னிடம் தனிப்பட்ட முறையிலும், பொதுவெளியிலும் விவாதிக்க நான் தயாராகவே இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.