மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற பிரதமர் மோடியின் முடிவு அபாரமான அரசியல் திறனைக் காட்டுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பாதிப்புக் காலத்தில் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இந்த 3 மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

இந்தச் சட்டங்களை எதிர்த்துக் கடந்த ஓராண்டாக டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் விவசாயிகள், விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறாார்கள். விவசாயிகளுடன் 12 சுற்றுப் பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்தியும் தீர்வு ஏதும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வந்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் இந்த 3 சட்டங்களை அமல்படுத்துவதை இடைக்காலமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

இந்தச் சூழலில் இன்று மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். விவசாயிகளிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி, போராடும் விவசாயிகள் அவரவர் வீடுகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடியின் இந்த முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. அரசியல்வாதி போன்ற முடிவு.

பிரதமர் மோடி தனது பேச்சின்போது, இந்தியா தொடர்ந்து விவசாயிகளுக்கு சேவையாற்றும், அவர்களின் வளர்ச்சிக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும் என்றார். ஒவ்வொரு இந்தியரின் நலனைத் தவிர அவருக்கு வேறு சிந்தனை இல்லை என்பதையே இது காட்டுகிறது. பிரதமர் மோடி தனது அபாரமான அரசியல் திறனை வெளிப்படுத்திவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.