ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த தேர்தல் பணிக்குழுவில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், பொன்னையன், எம்பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், செம்மலை, தளவாய் சுந்தரம், வளர்மதி, செல்லூர் ராஜூ, தனபால், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கோகுல இந்திரா உள்ளிட்ட கட்சியின் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, கட்சியின் அமைப்புச் செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், எம்எல்ஏ தலைமையில், கீழ்க்கண்டவர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள்.

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு, கட்சி நிர்வாகிகளும், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி, கழக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஜன.26) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், பண்ணாரி மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உள்ள்ளூர் நிர்வாகிகள், தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக, நசியனூர் பகுதியில் உள்ள தனது குல தெய்வ கோயிலான அப்பாத்தாள் கோயிலில், பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் வழிபாடு செய்தனர்.