ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்காக பெருந்துறை சாலையில், அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பணிமனை திறக்கப்பட்டது.

பணிமனை அமைக்கப்பட்டபோது அதிமுக தலைமையிலான கூட்டணி என்றும், திறப்பு விழாவின்போது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும் பேனர் வைக்கப்பட்டது. ஆனால், அன்று மாலையிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பெயரை மாற்றி, பேனர் வைக்கப்பட்டது.

அடுத்த நாள் அதையும் அகற்றிவிட்டு, அஇஅதிமுக கூட்டணி வேட்பாளர் என்று புதிய பேனர் வைத்தனர். இந்த 4 பேனர்களிலும், எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரது பெரிய படங்களும், கூட்டணிக் கட்சிகள் என்ற முறையில் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோரது படங்கள் சிறியவையாகவும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், 5-வது முறையாக மீண்டும் பேனரை மாற்றியுள்ளனர். அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி வேட்பாளர் என பெயரை மாற்றி, பிரதமர் மோடியின் பெரிய படம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சிறிய படம், மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன.