எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் கிராமத்தில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக தருவைக்குளத்தைச் சேர்ந்த பாரத் (38) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவரை கடந்த 21-ம் தேதி பள்ளியில் படிக்கும் 2-ம் வகுப்பு மாணவர் பிரகதீஸின் பெற்றோர் சிவலிங்கம்(34), அவரது மனைவி செல்வி(28), செல்வியின் தந்தை முனியசாமி(53), அவரது மனைவி மாரிச்செல்வி ஆகியோர், தங்கள் குழந்தையை எப்படி அடிக்கலாம் எனக் கூறி கடுமையாக தாக்கினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் எட்டயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிவலிங்கம், செல்வி, முனியசாமி ஆகிய 3 பேரை அன்றைய தினமே கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்த நிலையில் மாரிச்செல்வியை(43) நேற்று போலீஸார் கைது செய்தனர்.

இதற்கிடையே, நேற்று கிராமத்தை சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், ஆசிரியரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைவரும் 3 வேன்கள் பிடித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கச் சென்றனர். இதனால் பள்ளி வளாகம் வெறிச்சோடியது.