குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தின் பதற்றம் குறையாத நிலையில், கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் தொங்கு பாலத்தில் காரை ஓட்டி சென்று சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய‌து.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்காக இருந்த தொங்கு பாலம் சில நாட்களுக்கு முன்னர் அறுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 141-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், பல்வேறு இடங்களில் உள்ள தொங்கு பாலங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாப்புரா அருகே பிரபலமான ஷ‌தோடு அருவி உள்ளது. இங்கு செல்வதற்காக எல்லாப்புரா அருகே ஹுலுவி மற்றும் தாண்டேலியை இணைக்கும் வகையில் ஆற்றுக்கு குறுக்கே தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் குறுகலான இந்த பாலத்தில் மக்கள் நடந்து செல்வதோடு, இரு சக்கர வாகனங்களில் மட்டுமே செல்வது வழக்கம்.

சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர், அந்த தொங்கு பாலத்தில் கார் ஓட்டி வந்தார். இதனால் தொங்கு பாலத்தில் அதிகளவில் அதிர்ச்சி ஏற்பட்டது. அதனை பொருட்படுத்தாத கார் ஓட்டுநர் தொடர்ந்து காரை செலுத்தியதால், பாலத்தின் நடுவே சிக்கியது. அப்போது தொங்கு பாலத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். எனவே உடனடியாக காரை பின்னால் எடுக்குமாறு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காரை உடனடியாக பின்னால் எடுக்க வைத்தனர். காரை ஓட்டி வந்த இளைஞரிடம் விசாரித்த போது, தொங்கு பாலத்தில் கார் செல்லும் என நினைத்தே இயக்கியதாக மன்னிப்பு கோரினார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.