“மருத்துவம் சார்ந்த 4,133 காலிப் பணியிடங்களுக்கான நபர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவர்” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிப்புகளின் விவரம்: * அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சித்தா, ஓமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிலையங்களில் ரூ.917.66 கோடியில் புதிய மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

 • அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சைகள் உரிய நேரத்தில் வழங்கிடுவதற்கு ஏதுவாக CT, MRI ஸ்கேன் உட்பட அதிநவீன உயிர்காக்கும் உயர்ரக மருத்துவ உபகரணங்கள் ரூ.298.95 கோடியில் வழங்கப்படும்.
 • நோய்களைக் கண்டறியும் ஆய்வகப் பரிசோதனைகள் எளிய முறையில் கிடைத்திடும் வகையில் ஒருங்கிணைந்த ஆய்வக கட்டமைப்புகள், நுகர்பொருட்கள் மற்றும் ஆய்வகக் கருவிகள் ரூ.304.12 கோடியில் வழங்கப்படும்.
 • 62 புதிய 108 அவசர கால ஊர்திகள், 13 தாய்சேய் நல ஊர்திகள் மற்றும் 92 நவீன மருத்துவக் கருவிகள் ரூ.21.40 கோடியில் வழங்கப்படும்.
 • மகப்பேறு, குழந்தைகள் மற்றும் பச்சிளங் குழந்தைகள் நலனுக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், பச்சிளம் குழந்தை பராமரிப்புப் பிரிவுகள் ஆகிய “தாய்-சேய் நல சேவைகள்” ரூ.43.41 கோடியில் மாநில அளவில் மேம்படுத்தப்படும்.
 • சமூக அளவில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள், ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.3.31 கோடியில் செயல்படுத்தப்படும்.
 • நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணிபுரியும் 60,587 நகர்ப்புறத் தூய்மைப் பணியாளர்களுக்கான “முழு உடல் பரிசோதனை” மற்றும் “சிறப்பு முகாம்கள்” நடத்தப்படும்.
 • தூய்மைப் பணியாளர்களின் பணியிட நலன்கருதி, “தனி அறை” அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் அமைத்துத் தரப்படும்.
 • போதை மீட்பு சேவைகள் தேவைப்படும் பகுதிகளைக் கண்டறிந்து, உரிய மனநல ஆலோசனை மற்றும் புனர்வாழ்வு சேவைகள் அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் கிடைத்திடும் வகையில் ரூ.5.23 கோடியில் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.
 • மாரடைப்பு, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மருந்துகளை (emergency loading dose) காலதாமதமின்றி வழங்கி உயிரிழப்பினைத் தடுத்திட ரூ.3.37 கோடியில் மருந்துகள் வழங்கப்படும்.
 • அனைத்து அரசு மருத்துவ மையங்களில் ஆய்வக சேவைகள் (Laboratory reagent and consumables for Integrated Essential Laboratory Services) ரூ.185.24 கோடியில் மேம்படுத்தப்படும்.
 • மருத்துவம் சார்ந்த 4,133 காலிப் பணியிடங்களுக்கான நபர்கள் “தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்” மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவர்.

* அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு உள்ளூர் மக்களுடன் இணைந்து மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைபயிற்சி (Health Walk) மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு மருத்து முகாம்கள் நடத்தப்படும்.

 • கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.10.17 கோடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
 • மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பினைத் தடுக்க இருதய பாதுகாப்பு மருந்துகள் ரூ.3.37 கோடியில் வழங்கப்படும்.
 • கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனைக்கு ரூ.146.52 கோடியில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
 • சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.64.90 கோடியில் புதிய மாணவியர் விடுதி கட்டப்படும்.
 • சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடம் ரூ.53 கோடியில் அமைக்கப்படும்.
 • சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.35.15 கோடியில் செவிலியர் பயிற்சிப் பள்ளிக் கட்டடம் அமைக்கப்படும்.
 • 200 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் ரூ.80 கோடியில் கட்டப்படும்.

அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருவள்ளூர், விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள 13 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ரூ.6.88 கோடியில் ஏற்படுத்தப்படும்.

 

 

 • திருவாரூர் மாவட்டம் விஜயபுரம் அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடம் அமைக்கப்படும்.
 • 75 சிறப்பு பச்சிளங் குழந்தை பராமரிப்புப் பிரிவுகளுக்கு உயிர்காக்கும் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் ரூ.4.76 கோடியில் வழங்கப்படும்.
 • திருச்சி, திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் “தாய் மற்றும் பச்சிளங் குழந்தை சிறப்பு கவனிப்பு பிரிவு” (MNCU) ரூ.3.44 கோடியில் ஏற்படுத்தப்படும்.
 • 10 முதல் 19 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினருக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 25,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

* மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் ஹீமோகுளோபினோபதி நோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்நோய்க்கான உயிர் காக்கும் உயர்ரக மருந்துகள் ரூ.40 கோடியில் வழங்கப்படும்.

 • ரூ.20 கோடியில் காசநோய் பரிசோதனைக்கான நுகர்பொருட்கள் வழங்கப்பட்டு, அனைத்து வட்டாரங்களிலும் “Walk in centre for TB” உருவாக்கப்பட்டு ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சைகள் வழங்கப்படும்.
 • அரசு துணை சுகாதார அளவிலான நலவாழ்வு மையங்கள் “தேசிய தரச் சான்றிதழ்” பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
 • தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் “மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம்” என்ற பெயரில் செயல்படும்.
 • சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி உட்பட 3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முழு உடல் பரிசோதனை மையம் ரூ.15 கோடியில் அமைக்கப்படும்.