படிப்புகளில் சேராமல் இணையவழியில் தேர்வெழுதி பட்டம் பெறமுயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய சென்னை பல்கலை. முடிவு செய்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம்சிறப்பு தேர்வு குறித்து 2019-ம்ஆண்டு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், 1980-ம் ஆண்டு முதல்அரியர் வைத்துள்ளவர்கள் 2019-20-ம் கல்வியாண்டு சிறப்பு தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் கரோனா பரவலால் கடந்தாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள், பருவத்தேர்வுகள் இணையவழியில் நடத்தப்பட்டன. அதன்படி நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடந்த டிசம்பரில் நடைபெற்ற சிறப்புத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் தொலைதூரக் கல்வி படிப்பில் சேராத 117 பேர் சிறப்புத் தேர்வில் முறைகேடாகப் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சென்னை பல்கலை. அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பருவத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும்முன் தேர்வு மற்றும் கல்விக் கட்டணங்களை செலுத்திவிட்டார்களா என சோதனை செய்வது வழக்கம். அவ்வாறு ஆய்வு செய்தபோது 117மாணவர்களின் விவரங்கள் குறிப்பேடுகளில் இல்லை என்ற அதிர்ச்சியான தகவல் தெரியவந்தது.
இதுதொடர்பாக விசாரித்தபோது, சம்பந்தபட்ட 117 மாணவர்கள், பல்கலை. அலுவலர்கள் சிலரின் உதவியுடன் முறைகேடாகத்தேர்வில் பங்கேற்றது தெரியவந்தது. இந்த 117 மாணவர்களின் விண்ணப்பங்களையும் நேரடியாக இணையதளத்தில் பதிவேற்றி தேர்வில் பங்கேற்க அந்த அலுவலர்கள் வழிசெய்துள்ளனர். இதற்காக ரூ.3 லட்சம் வரை அவர்கள் லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து முறைகேடாகப் பட்டம் பெற முயற்சித்த 117 பேரின்தேர்வு முடிவுகளை ரத்து செய்யபல்கலை. நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மேலும், பிரத்யேகக் குழுஅமைத்து விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
இதற்கிடையே, இன்று நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் இந்த முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
117 மாணவர்களின் விண்ணப்பங்களையும் நேரடியாக இணையத்தில் பதிவேற்றி தேர்வில் பங்கேற்க, பல்கலை. அலுவலர்கள் சிலர் வழிசெய்துள்ளனர். இதற்காக ரூ.3 லட்சம் வரை அவர்கள் லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.