ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட வாக்காளர் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்ட வேறு மாவட்ட வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், வரும் அக்.6, 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது.

இந்நிலையில், மாநிலதேர்தல் ஆணையத்தில் அதிமுகவழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் நேற்றுஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும், ஆளுங்கட்சியினர் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான எனது புகாரைத் தொடர்ந்து, தற்போது மாநில தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் தற்போது பூத் ஸ்லிப் வழங்கப்படுகிறது. ஆளுங்கட்சியால் நியமிக்கப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மூலம் திமுகவினருக்கு மட்டுமே இது வழங்கப்படுகிறது. இதன்மூலம் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பூத் ஸ்லிப் அல்லது வாக்காளர் சீட்டுகளை, அதற்காகநியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலமாக மட்டுமேவழங்க வேண்டும். மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் விதிகளுக்கு புறம்பாக வாக்காளர் பட்டியலில் 10 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவற்றையும் கண்காணித்து, வேறு மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்கள் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

வாக்காளர்கள் வாக்களிக்க பூத் ஸ்லிப் அல்லது வாக்காளர் சீட்டுகளை பயன்படுத்துவதற்கு பதில், ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை அடையாள ஆதாரமாக பயன்படுத்த அறி வுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.