மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பாக, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6-ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இதுவரை 1.40 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இன்னும் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர், தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். எனவே, இதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுமா என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘எவ்வளவு பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்பதை, இன்னும் 2 நாட்கள் கழித்து ஆய்வுசெய்ய உள்ளோம். அதன்பிறகு, இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, அவருடன் ஆலோசித்து, அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும்’’ என்றார்.