காக்கி நாடாவில் இருந்து செங்கல்பட்டில் வரை இயக்கப்பட்டு வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை புதுச்சேரி வரை நீட்டிக்கப்படும் என்ற ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அறிவிப்புக்கு புதுச்சேரி சபாநாயகர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இதில் சர்க்கார் எக்ஸ்பிரஸ் சேவை புதுச்சேரி வரை நீட்டிப்பு செய்தமைக்கு ஏனாம் தொகுதி எம்எல்ஏ கொல்லப்பள்ளி அசோக் நன்றி தெரிவித்து பேசினார்.

தொடர்ந்து, பேரவைத் தலைவர் செல்வம் பேசுகையில், ”ஏனாமில் இருந்து புதுச்சேரிக்கு நேரடியாக பொது போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் ஏனாம் மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். ஏனாம் மக்களின் இந்த பிரச்சனையை தீர்க்க அந்த தொகுதியின் எம்எல்ஏ கொல்லப்பள்ளி அசோக் என்னை சந்தித்து சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக ஆளுநர், முதல்வர் ஆகியோரிடம் தெரிவித்து, அவர்களது வழிகாட்டுதலோடு கடந்த மாதம் நானும், ஏனாம் தொகுதி எம்எல்ஏவும் டெல்லி சென்று பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரை சந்தித்து கடிதம் அளித்து கோரிக்கை வைத்தோம். புதுச்சேரி மாநில வளர்ச்சியில் அக்கறைக்கொண்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டில் வரை செல்லும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் புதுச்சேரி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஏனாம் பிராந்திய மக்களின் நீண்டநாள் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுத்து சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலை புதுச்சேரி வரை நீட்டிப்பு செய்த பிரதமர், ரயில்வே அமைச்சர், புதுச்சேரி ஆளுநர், முதல்வர் ஆகியோருக்கு ஏனாம் தொகுதி மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.