Site icon Metro People

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க பிப்.28 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க புதன்கிழமை (பிப்.15) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது: “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இதுவரை 2.60 கோடி பேர் இணைத்துள்ளனர். இன்னும் 7 லட்சம் பேர் இணைக்கவில்லை. அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 13 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவகாசம் வழங்கப்பட மாட்டாது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கரோனா காலகட்டத்தில் கூட மதுபானக் கடைகள் மூடப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் பள்ளி, கோயில்களுகளுக்கு அருகே செயல்பட்ட 88 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலை மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, இலவசம், மானியம் பெறும் மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற மின் நுகர்வோரின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை மின் வாரியம் காலக்கெடுவை நீட்டித்தது. அதன்பிறகு, பிப்ரவரி 15-ம் தேதி வரை ஏற்கெனவே 2 முறை நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version