பாலியல் தொழிலில் ஈடுபட இளம்பெண்களை வற்புறுத்தும் முகநூல் குழு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தமிழக டிஜிபிசைலேந்திரபாபுவுக்கு தேசியமகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழகத்தில் இருந்து தேசியமகளிர் ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் 30 வயதுக்கு உட்பட்ட திருமணமான இளம்பெண்களை இலக்காக வைத்து, அவர்களது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை சிலர் பெற்றுக் கொள்கின்றனர். பின்னர், பெண்களிடம் இருந்துபெற்ற தனிப்பட்ட புகைப்படங்களை பொது வெளியில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் செயலில் இவர்கள் ஈடுபடுகின்றனர். முகநூலில் இவர்கள் ஒரு குழுவாகவே செயல்படுகின்றனர் என்று அந்த புகார்கள் மூலம் தெரியவருகின்றன.

தங்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாகவும் சில புகார்கள் வந்துள்ளன.

குறிப்பாக, சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஒருபெண் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். தனது தனிப்பட்ட புகைப்படத்தை பொது வெளியில் வெளியிடுவதாக ஒருவர் மிரட்டுகிறார் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுதொடர்பாக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த முகநூல் குழுவானது அரசியல் கட்சியுடன் நெருக்கமாக உள்ளது. அதேபோல, சில அரசியல்வாதிகளுக்கும் இதில் தொடர்பு உள்ளது. பல மாதங்கள் ஆகியும் இந்த புகார்கள் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இந்த விவகாரம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற முழுமையான அறிக்கையை மார்ச் 22-ம் தேதிக்குள்தயாரித்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் விளக்கம்

இதுபற்றி டிஜிபி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னை காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில்தான் சாஸ்திரி நகர் காவல் நிலையம் வருகிறது. எனவே, இதுகுறித்த தகவலை அளிக்குமாறு சென்னை மாநகர போலீஸாரிடம் கேட்டு, அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு முறையாக பதில் அளிக்கப்படும். சில புகார்தொடர்பாக விரிவான விசாரணை தேவை. அதற்காக சில நேரங்களில் தாமதம் ஏற்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் காவல் துறை அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்’’ என்றனர்.