மதுரை: வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதி உயர் நீதிமன்றக் கிளையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

எனது அமர்வில் சில நாட்களுக்கு முன்பு ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், தனது வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க இயலுமா என்றார். நான் அன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு எடுக்கிறேன் என்றேன். அதற்கு அவர் மாலை 4 மணிக்கு எனது குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வர வேண்டும். அதற்கு நான் 3.30 மணிக்கே பள்ளிக்குச் செல்ல வேண்டும். இதனால் 4 மணி என்பது எனக்கு உகந்ததாக இருக்காது என்றார்.

பெண்களுக்கும் சிரமம் உள்ளது

அவரது இந்த பதில் என்னை சிந்திக்க வைத்தது. என் முன்னே சில இளம் தாய்மார்களாக உள்ள பெண் வழக்கறிஞர்களும் வழக்குகளுக்காக ஆஜராகி வருகின்றனர். அவர்களும் இதுபோன்ற சிரமங்களை சந்திக்கலாம். இதனால் சிரமங்களை சந்திக்கும் அந்த வழக்கறிஞர்களுக்கு ஏற்ப அவர்களின் வழக்குகளை எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

அத்தகைய வழக்கறிஞர்கள் ஒரு நாள் முன்னதாக நீதிமன்ற அலுவலரிடம், தான் ஆஜராகும் வழக்கு விசாரணைக்கு வர வேண்டிய கால நேரத்தை சரி செய்து கொள்ளலாம். அவர்கள் தங்கள் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டிய தேதி, நேரம், வாதிட முன்வைக்கும் சான்று வழக்குகளின் விவரங்களை ஒரு நாள் முன்னதாக தெரிவித்து விட்டால் உதவியாக இருக்கும்.

இந்த சலுகை தனி நபராக செயல்படும் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே. ஒரு நிறுவனம் சார்ந்து செயல்படும் வழக்கறிஞர்கள் தங்களின் மூத்த வழக்கறிஞர்களுக்காக கால நேரத்தை மாற்றிக்கேட்பது சரியாக இருக்காது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும்.

இவ்வாறு நீதிபதி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் வரவேற்பு

நீதிபதியின் இந்த நடவடிக்கையை வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர். வழக்கறிஞர் ஷாஜிசெல்லன் கூறுகையில், இந்திய நீதிமன்றங்கள் அனைத்திலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றார்.

பெண் வழக்கறிஞர் அன்னி அபிநயா கூறுகையில், இது ஒரு அழகான நடவடிக்கை. தொழில் முறை மற்றும் குழந்தை பராமரிப்பு கடமைகளை செய்யும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது. இந்த நடவடிக்கையில் நான் ஒரு பயனாளியாக இருப்பேன். இதற்காக நீதிபதிக்கு நன்றி என்றார்.