“ஆலைக்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலத்தை, பாதிக்கப்பட்ட விவசாயிகளே கையகப்படுத்தி பிரித்துக் கொண்டு சாகுபடி செய்வதை, அடுத்த போராட்டமாக அறிவிக்க வேண்டும்” என்று தமிழ்த் தேசிய பேரியிக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கடந்த நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தின் 21-வது நாளான இன்று, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக.முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற தமிழ்த் தேசிய பேரியிக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியது: ”இங்குள்ள விவசாயிகளுக்குத் தெரியாமல் அவர்களுடைய நிலத்தின் மீது கடன் வாங்கியது திருட்டு, மோசடி குற்றமாகும். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். இங்குப் போராடும் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து, நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்.

இந்த ஆலைக்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலத்தை, பாதிக்கப்பட்ட விவசாயிகளே கையகப்படுத்தி பிரித்துக் கொண்டு சாகுபடி செய்வதை, அடுத்த போராட்டமாக அறிவிக்க வேண்டும். இங்கு அமைதியாக போராடும் விவசாயிகள் மீது வழக்குப் பதிந்துள்ளதாக கூறியுள்ளார்கள். இந்த வழக்குகள் அனைத்தையும், ஆலை உரிமையாளர், சர்க்கரை அதிகாரிகள் மீது பதிவு செய்ய வேண்டும்.

போலீஸார் தாமாக, இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை, சென்னையிலுள்ள சூத்திரதாரிகளால் அறிவிக்கப்படுகிறது. இங்குப் போராடும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ததாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இல்லை என்றால், தமிழகத்திலுள்ள விவசாயிகள் மற்றும் ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி, தற்காப்பு போராட்டங்களை விரிவுப்படுத்தி, வேகப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.