ஆஸ்கர் அகாடமியின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ‘ஜெய் பீம்’ படம் தொடர்பான சிறப்பு வீடியோ பகிர்வு இடம்பெற்றுள்ளது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் சில மாதங்கள் முன் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தளித்த படம் ‘ஜெய் பீம்’. உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்த இந்தப் படம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டுகளைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்தது. அதேபோல், ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய் பீம்’ இடம்பெற்றது. தற்போது ‘ஜெய்பீம்’ படத்துக்கு இன்னொரு கெளரவம் கிடைத்துள்ளது. அது ஆஸ்கர் விருதின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ‘ஜெய்பீம்’ படம் தொடர்பான சிறப்பு வீடியோ பகிர்வு இடம்பெற்றுள்ளது.

திரைப்பட கலைஞர்களின் உழைப்பை, ஒரு திரைப்படத்தின் அணுகுமுறையை பிரதிபலிக்கும் வகையில் #SceneAtTheAcademy என்ற தலைப்பில் ஆஸ்கர் அகாடமி உலக சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தங்கள் பக்கங்களில் பதிவிட்டு உலக சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அதன்படி, இந்த #SceneAtTheAcademy-யில் தற்போது ஜெய் பீம் படத்தின் காட்சிகளும், இயக்குநரின் விவரிப்புகளும் 12 நிமிட காட்சிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

ஆஸ்கரின் ட்விட்டர் பக்கத்திலும் அதைப் பகிர்ந்து, படத்தை பற்றியும் மேனாள் நீதிபதி சந்துருவின் முயற்சிகளை பாராட்டியும் பதிவிட்டப்பட்டுள்ளது. ஆஸ்கர் அகாடமியின் யூடியூப் பக்கத்தில் #SceneAtTheAcademy பிரிவில் தமிழ்த் திரைப்படம் ஒன்று இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பதால் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.