பெரும் கடனில் சிக்கித் தவிக்கும் வோடாபோன் ஐடியாவை மீட்கும் திட்டத்தின் கீழ் அதன் 35.8% பங்குகள் மத்திய அரசுக்கு வழங்க அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்திய தொலை தொடர்புத் துறையில் தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சந்தையில் இருந்தாலும் மூன்றாவதாக வோடபோன் ஐடியா நிறுவனம் இருக்கிறது. ஆனால் அந்த நிறுவனம் சந்தையில் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடுகிறது.

அந்நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 27 கோடி வாடிக்கையாளர்கள், 10,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தபோதிலும் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இதனையடுத்து மீட்பு நடவடிக்கையாக தனித்தனியாக இயங்கி வந்த வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய இரு நிறுவனங்கள் சந்தையில் தனித்தனியாக இருந்தால் போட்டியை சமாளிக்க முடியாது என்னும் காரணத்தால் இணைந்தன. வோடபோன் ஐடியா என பெயர் மாற்றப்பட்டது. புதிய நிறுவனத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு 27 சதவீதமும், வோடபோன் நிறுவனத்துக்கு 45 சதவீதமும் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் இந்த நிறுவனத்துக்கு சிக்கல் தீர வில்லை.

நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல 25,000 கோடி நிதி திரட்ட கடந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்கள் யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. அந்நிறுவனம் மத்திய அரசுக்கு மட்டுமே ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் பணம் செலுத்த வேண்டியுள்ளது.

இதைத் தவிர வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ள ரூ.23 ஆயிரம் கோடி கடனுக்கான வட்டியையோ அல்லது அசலையோ திரும்ப செலுத்தவும் வழி தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

இந்நிறுவனத்தின் பங்குகளும் இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் சரிவை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து தனது பங்குகளை இலவசமாக மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் வசம் கொடுக்கிறேன் என குமார் மங்கலம் பிர்லா அறிவித்தார்.

ஏற்கனவே பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் டெலிகாம் நிறுவனத்தையே வெற்றிகரமாக நடத்த அரசு திணறும் நிலையில் இந்த கோரிக்கை சாத்தியப்படுமா என்பது சந்தேகம் ஏற்பட்டது.

இந்தநிலையில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஸ்பெக்ட்ரம் ஏலத் தவணைகள் தொடர்பான முழு வட்டியையும், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையையும் ஈக்விட்டியாக மாற்ற ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம் நிறுவனத்தின் 35.8% உரிமையாளர் அரசு இருக்கும். இதன் மூலம் தொலைத்தொடர்புத் துறைக்கு செலுதத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தீர்ப்பதகான திட்டத்தின் ஒருபடியாக ஏற்கவும் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது.

வோடாபோன் ஐடியா லிமிடெட், அதன் வாரியம் நிலுவைத் தொகையை ஈக்விட்டியாக மாற்ற ஒப்புதல் அளித்த பிறகு இந்த நிறுவனத்தின் 35.8% பங்குகள் மத்திய அரசு வசம் வரும்.

வோடபோன் குரூப் பிஎல்சி 28.5% பங்குகளையும், ஆதித்யா பிர்லா குழுமம் 17.8% பங்குகளை வைத்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.