கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியிலிருந்து விரைவில் செயல்படவிருக்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் ஆலையானது, முன்பே அறிவிக்கப்பட்டபடி முழுவதும் பெண்களால் இயக்கப்படும் வாகனத் தொழிற்சாலையாக அமையவிருக்கிறது. முதற்கட்டமாகப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30%-லிருந்து 40% ஆக உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் நிலையில், தனியார் துறையிலிருந்து பெண்களுக்கு மிகப் பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்பை அளிக்கும் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்பதோடு உற்பத்தித் தொழில் துறையின் மற்ற துறைகளும் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கவை.

போச்சம்பள்ளி இ-ஸ்கூட்டர் தொழிற்சாலையின் பூர்வாங்கப் பணிகள் 2020 டிசம்பரில் அன்றைய முதல்வர் பழனிசாமி மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடந்துவருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே மின்வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்துவருகிறது. அதைக் கருத்தில் கொண்டு ஆண்டொன்றுக்கு ஒரு கோடி இ-ஸ்கூட்டர்களைத் தயாரிக்கும் இலக்கோடு வாகன உற்பத்தியில் இறங்கியிருக்கிறது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம். தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ரூ.2,400 கோடி முதலீட்டில் அந்நிறுவனம் உருவாக்கிவரும் வாகனத் தொழிற்சாலையானது முழுவதும் பெண் தொழிலாளர்களைக் கொண்டு செயல்படவிருக்கிறது என்பது உற்பத்தித் தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.