“போலி பாஸ்போர்ட் வழக்கில் மதுரை க்யூ பிரிவு குற்ற வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு 41 எதிரிகள் மீது நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘செப்டம்பர் 2019-ம் ஆண்டு மதுரையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த சில நபர்கள் இந்திய கடவுச்சீட்டுகள் பெற்று வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 27.09.2019 அன்று மதுரை நகர க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் 1967 ஆம் ஆண்டைய கடவுச்சீட்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

புலன் விசாரணை அதிகாரிகள், 28.09.2019 மற்றும் 29.09.2019 ஆம் தேதிகளில் மதுரையில் இயங்கி வந்த நான்கு பயண முகவர்களின் அலுவலகங்கள் மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். நான்கு பயண முகவர்கள் அன்றைய தினமே கைது செய்யப்பட்டனர். புலன் விசாரணையின் போது 124 கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டது. தொடர் புலன் விசாரணையில் 51 நபர்கள் இந்திய கடவுச்சீட்டுகள் பெற்றுள்ளனர் என்ற விபரமும் தெரிய வந்தது.

மேற்படி 175 கடவுச்சீட்டுகளில், 28 கடவுச்சீட்டுகளை இலங்கைத் தமிழர்கள் போலி ஆவணங்கள் மூலம் பெற்றுள்ளனர் என்று இதுவரை தெரியவந்துள்ளது. அந்த 28 கடவுச்சீட்டுகளில் 7 இலங்கை நபர்கள் மீது மதுரை நகர க்யூ பிரிவிலும் மீதமுள்ள 21 பேர் மீது சென்னை, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சேலம் மற்றும் கோயம்புத்தூர் நகர க்யூ பிரிவுகளில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. இதுதவிர, 30 கடவுச்சீட்டுகள் இந்தியர்களுக்கு உரியதா அல்லது இலங்கை நாட்டினர் பெற்ற கடவுச்சீட்டுகளா என்பது குறித்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

 

 

 

மீதுமுள்ள 117 கடவுச்சீட்டுகளில் ஓர் இந்தியருக்கான போலி கடவுச்சீட்டு தவிர மற்றைய 116 கடவுச்சீட்டுகளும் இந்தியர்களுக்குரியது என்று கண்டறியப்பட்டது. மதுரை நகர க்யூ பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன்விசாரணையில் 475 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு 340 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை இந்திய கடவுச் சீட்டு பெற்ற நான்கு இலங்கைத் தமிழர்கள் மற்றும் 11 பயண முகவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்திய கடவுச் சீட்டு பெற்ற 7 நபர்கள், 13 பயண முகவர்கள், 5 காவல்துறை அலுவலர்கள், 14 மண்டல கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் மற்றும் 2 தபால் துறை அலுவலர்கள் உட்பட மொத்தம் 41 நபர்கள் குற்றம் புரிந்துள்ளதாகவும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டு அவர்கள் மீது புலன்விசாரணை இறுதி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வழக்கில் காவல்துறை ஆய்வாளர் இளவரசுக்கு ராமநாதபுரம் சரக காவல் துணைத் தலைவர் 25.03.2022 தேதியிலும், தலைமைக் காவலர் கந்தசாமிக்கு மதுரை மாநகர தெற்கு சரக துணை ஆணையர் 20.05.2022 தேதியிலும் காவலர்கள் கவியரசு மற்றும் ஆனந்த் ஆகியோருக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 18.05.2022 ஆம் தேதியிலும், குற்ற நடவடிக்கை எடுப்பதற்காக சட்டப்பிரிவு கு.மு.வி.ச பிரிவு 197-ன்படி துறையின் முன்அனுமதி வழங்கியுள்ளனர்.

தபால் துறை ஊழியர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிவகங்கை மாவட்ட தபால் துறை கண்காணிப்பாளர் 31.01.2022 அன்று துறையின் முன்அனுமதி சட்டப்பிரிவு கு.மு.வி.ச பிரிவு 197ன்படி வழங்கியுள்ளார். மேலும் 1967ஆம் ஆண்டைய கடவுச்சீட்டு சட்டப் பிரிவு 15-ன் படி 39 எதிரிகள் மீதும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் முன்அனுமதி வழங்கியுள்ளார். இதில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர். இந்த வழக்கில் அன்றைய மதுரை மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் சிவக்குமார் மீது வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் முன் அனுமதி 17.05.2022 அன்று வழங்கியுள்ளார்.

14 கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் மீதும் கு.மு.வி.ச பிரிவு 197-ன்படி குற்ற நடவடிக்கை எடுப்பதற்கான முன்அனுமதி வேண்டி மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு முன்மொழிவு 31.12.2021 அன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன் மீது அவ்வமைச்சகத்திலிருந்து கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு 10.03.2022 அன்று விளக்கங்கள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திலிருந்து உரிய முன் அனுமதி இதுவரைப் பெறப்படவில்லை.

மதுரை க்யூ பிரிவு குற்ற வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு 41 எதிரிகள் மீது நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here