டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

63 வயதாகும் நிர்மலா சீதாராமனுக்கு கடந்த திங்கள்கிழமை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவருக்கு காய்ச்சலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 4 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நிர்மலா சீதாராமன் குணமடைந்ததை அடுத்து, இன்று அவர் வீடு திரும்பினார்.

வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால், அதற்கான ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிதி நிலை அறிக்கைதான் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாம் முறை ஆட்சியின் முழு நிதிநிலை அறிக்கையாக இருக்கும். 2024-ல் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த நிதி நிலை அறிக்கை பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.