கோடை காலம் முடியும் வரை குப்பைக் கிடங்குகளில் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 26-ஆம் தேதி மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து 2 நாட்களாக 12 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் நடைபெற்றது. தற்போது தீயணைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளைக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோடை காலம் முடியும் வரை குப்பைக் கிடங்குகளில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்திவைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “கோடை காலங்களில் குப்பைக் கிடங்குகளில் தீ பிடிப்பது தொடர்ந்து வருகிறது. எனவே, இதைத் தடுக்க பெருங்குடி மற்றும் குப்பைக் கிடங்குகளில் தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு கிடங்குகளில் தலா 2 வாகனங்கள் என்று மொத்தம் 4 வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீயணைப்பு துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்புகளிலும் முழுவதும் தண்ணீரை நிரம்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.