விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

சிவகாசி அருகே திருத்தங்கல் சாட்சியாபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (40). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே வி. சொக்கலிங்காபுரத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 8 அறைகள் உள்ளன.

இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிப்புப் பணிகள் தொடங்கின. அப்போது மருந்துக் கலவை அறையில் உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவகாசி அருகே மீனம்பட்டி ஜான்சிராணி காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (60) என்ற தொழிலாளி உடல் சிதறி பலியானார்.

தகவலறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பலியான ஆனந்தராஜின் உடல் சிதறி மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது. தீயணைப்புத் துறையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர் .

சம்பவ இடத்துக்கு சிவகாசி டிஎஸ்பி பாபு பிரசாந்த், தனி தாசில்தார் த.ஜீவஜோதி, போலீஸார் சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.