‘மாநாடு’ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மன்மதலீலை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படம் கடந்த நவ.25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் படக்குழுவை பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் தனது அடுத்தப் படம் தொடர்பான அறிவிப்பை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். ‘மன்மதலீலை’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் குறித்து வெங்கட் பிரபு கூறியிருப்பதாவது:

திருமணத்துக்கு பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் கொண்ட ஜாலியான படமாக இது இருக்கும். இது 1980களில் கே.பாக்யராஜ் இயக்கிய ‘சின்ன வீடு’ படத்தின் நவீன வடிவமாகவும், ஆடியன்ஸுக்கு ஒரு புதிவித திரைக்கதை அனுபவமாகவும் இப்படம் இருக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றிய கதை இது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.