வரலாற்றிலேயே முதல் முறையாக நிலவில் சேகரிக்கப்பட்ட மண்ணை கொண்டு செடியை வளர்த்துள்ளனர் விஞ்ஞானிகள். விண்வெளி ஆய்வில் இது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஜூலை 21, 1969 வாக்கில் நிலவில் தனது காலடி தடத்தை நிலவில் பதித்தார் ஆர்ம்ஸ்ட்ராங். அதனை உலகமே கொண்டாடியது. தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிற கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ சாத்தியம் உள்ளதா என்பதை பொறுத்தே இந்த ஆய்வு பணிகள் அமைந்துள்ளன. சந்திர கிரகம் மட்டுமல்லாது பிற கிரகங்களிலும் இந்த ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை உலக நாடுகள் கூட்டாகவும், தனியாகவும் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், நிலவில் சேகரிக்கப்பட்ட மாதிரி மண்ணை கொண்டு செடியை வளர்த்து அசத்தியுள்ளனர் விஞ்ஞானிகள். நாசா மற்றும் புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ஆய்வு பணியை இணைந்து மேற்கொண்டுள்ளனர். அப்பல்லோ 11, 12 மற்றும் 17 மிஷன்களில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை கொண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் அரபிடோப்சிஸ் என்ற தாவர விதையை விதைத்துள்ளனர் விஞ்ஞானிகள். இது கடுகு வகையை சார்ந்த செடி என தெரிகிறது.

இந்த ஆய்வு பணிக்காக ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு கிராம் நிலவின் மண் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் விதையை விதைத்து, தண்ணீர் தெளித்து பாதுகாத்துள்ளனர் விஞ்ஞானிகள். இரண்டு நாட்களில் அந்த மண்ணில் விதைக்கப்பட்ட விதைகள் செடிகளாக முளைத்துள்ளன. இதனை விஞ்ஞானிகள் மிகவும் வியப்புடன் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

1969 தொடங்கி நிலவில் இருந்து பாறைகள், கற்கள், மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்துள்ளனர் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். அதன் மொத்த எடை 382 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரமாக அதனை பதப்படுத்தி வைத்துள்ளதாம் நாசா.