தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கன அடியைக் கடந்தது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா மாநில அணைகளான கபினி, கேஆர்எஸ் ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. இவ்விரு அணைகளிலும் ஏற்கெனவே முக்கால் பாகத்துக்கும் மேலாக தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் புதிய நீர்வரத்தால் அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை நோக்கி விரைவாக நிரம்பத் தொடங்கின.

இந்நிலையில், அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி நீர்வரத்தின் அளவுக்கு ஏற்ப கணக்கீடு செய்யப்பட்டு 2 அணைகளில் இருந்தும் தமிழகத்தை நோக்கி காவிரியாற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. 2 தினங்களுக்கு முன்பு விநாடிக்கு 4000 கனஅடி என்ற அளவில் திறக்கப்பட்ட உபரி நீரானது, பின்னர் சூழலுக்கு ஏற்ப படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

அங்குள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு திடீரென கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியதால் தமிழகத்தை நோக்கி திறக்கப்படும் உபரி நீர் விநாடிக்கு 50 ஆயிரத்தை கடந்தது. கடந்த ஞாயிறு இரவு விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அதேபோல, கடந்த 10-ம் தேதி(ஞாயிறு) காலை தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் விநாடிக்கு 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து அன்று மாலை விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியை தொட்டது.

திங்கள் அன்று காலை விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாகவும், பகலில் விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாகவும், மாலையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடியாகவும் விரைந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், இன்று(செவ்வாய்) காலை 6 மணி அளவீட்டின்படி நீர்வரத்து விநாடிக்கு 98 ஆயிரம் கன அடி என்ற நிலையை தொட்டது. 9 மணியளவில் விநாடிக்கு 1 லட்சம் கன அடியைக் கடந்து காவிரியாற்றில் ஆர்ப்பரிப்புடன் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக 3 நாட்களுக்கு முன்பே ஒகேனக்கல்லில் ஆற்றிலும், அருவியிலும் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்தது. இந்த தடை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. புதிய நீர்வரத்தால் ஆற்றில் செல்லும் நீர் கலங்கிய நிலையில் செந்நிறமாக காட்சியளிக்கிறது.

ஒகேனக்கல் பகுதியில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் காவிரியாற்றில் பாறைகள் அணைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதேபோல, பிரதான அருவி, தொங்கும் பாலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் நடைபாதையில் வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளப்பெருக்கு காரணமாக தருமபுரி மாவட்ட காவிரியாற்றின் கரியோர பகுதிகளில் வருவாய், வனம் உள்ளிட்ட அரசுத் துறைகள் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.