மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நெரோகா கால்பந்து அணிக்காக இன்பன் உதயநிதி தேர்வாகியுள்ளார்.

இந்தியன் ஐ-லீக் கால்பந்து தொடர் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிகவும் முக்கியமான தொழிற்முறை கால்பந்து தொடர் இதுவாகும். இதில் தற்போது 21 கிளப் அணிகள் பங்கேற்று வருகின்றன. 2020-21ஆண்டிற்கான ஐ-லீக் தொடரை கோகுலம் கேரளா எஃப்சி அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஐ-லீக் தொடருக்கான வீரர்கள் ஒப்பந்தம் செய்யும் படலம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், மணிப்பூர் மாநிலத்துக்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தமிழ்நாடு மாநில முதல்வரின் பேரனும், உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி தேர்வாகியுள்ளார்.

இதுகுறித்து அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட நேரோகா கால்பந்து அணியின் ட்விட்டர் பதிவில், ‘சென்னை ட்ரையல்ஸ் அணியிலிருந்து தேர்ந்தெடுத்துள்ளோம். இளம் ஃடிபெண்டர் இன்பன் உதயநிதியுடன் அணிக்கு எடுத்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் கருணாநிதி கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக இருந்தது. கிரிக்கெட் போட்டிகளை ஆர்வமாக பார்ப்பார். சச்சின் டெண்டுல்கரின் தீவிர ஃபேனாக இருந்துவந்தார். இந்தநிலையில், கருணாநிதியின் கொள்ளுப்பேரன் கால்பந்து விளையாட்டில் தீவிரமாக கால்தடத்தைப் பதித்துவருகிறார். உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது, அவரது மகன் இன்பன் உதயநிதியுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகைக்குப் பிறகு இன்பன் குறித்து கவனம் எழுந்துள்ளது.