விவசாயிகளுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காரைக்காலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கடற்கரை சாலையில் நாட்டின் 75- வது சுதந்திர தின விழா இன்று(ஆக.15) நடைபெற்றது. இதில் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சமாதானப் புறாக்களை பறக்கவிட்டுப் பேசியது” புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களும் சம வளர்ச்சி அடைய புதுச்சேரி அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்ய அரசு பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹட்கோ நிதி உதவியுடன் அக்கரைஅவட்டம் கிராமத்தில் ரூ.20 கோடி செலவில் புதிதாக கிளைச் சிறை வளாகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை அருகில் ரூ.5 கோடி மதிப்பில் ஆயுஷ் மருத்துவமனை கட்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது” என்றார்.

தொடர்ந்து காவல் துறை, இந்திய ரிசர்வ் பட்டாலியன், ஊர்க்காவல் படை, தீயணைத்துறை வீரர்கள், குடிமைப் பாதுகாப்பு படை தன்னார்வலர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆகியோரின் அணி வகுப்பை அமைச்சர் பார்வையிட்டார். தியாகிகள், பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்றோர், சிறந்த காவலர்கள், கரோனா முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பரிசுகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம், தியாகிகள் உள்ளிட்ட திரளானோர் விழாவில கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் மற்றும் கலை பண்பாட்டுத் துறையினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேசியக் கொடியேற்றிய முதல் பெண் அமைச்சர்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், சுதந்திர தின விழாவின் போது புதுச்சேரியில் முதல்வரும், மற்ற 3 பிராந்தியங்களில் அமைச்சர்களும் தேசியக் கொடியேற்றி வைக்கும் நடைமுறை உள்ளது. காரைக்காலில் இன்று நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்ததன் மூலம், புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதல் முறையாக சுதந்திர தின விழாவில் பெண் அமைச்சர் ஒருவர் தேசியக் கொடியேற்றி வைத்தப் பெருமையை அமைச்சர் சந்திர பிரியங்கா பெற்றுள்ளார்.

சுதந்திர தின உரையில் “ஒன்றிய அரசு” வார்த்தை

புதுச்சேரியில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சர் சந்திர பிரியங்கா வாசித்த சுதந்திர தின உரையில் ஒரு இடத்தில் “ஒன்றிய அரசு” என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டிருந்தது. காரைக்கால் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 500 எல்.ப்.எம் திறன் கொண்ட பி.எஸ்.ஏ பிராண வாயு நிலையம் ஒன்று “ஒன்றிய அரசால்” கடந்த 10.04.2021 அன்று நிறுவப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் பேசும்போதும் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டார். ஆனால் மற்ற இடங்களில் மத்திய அரசு என்ற வார்த்தையே இடம் பெற்றுள்ளது.