சசிகலாவிடம் 2 நாட்கள் நடந்த ஒன்பதரை மணி நேரம் விசாரணை நேற்று முடிந்தது. இதையடுத்து சசிகலா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படிடையில் அடுத்தக்கட்டமாக வழக்கில் சந்தேகிக்கப்படும் அதிமுகவின் முன்னாள் மூத்த அமைச்சர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் உயர் பாதுகாப்பையும் மீறி கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மிகப்பெரிய அளிவில் கொள்ளை சம்பவம் நடந்தது.
இந்த கொள்ளையின் போது பங்களாவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த கொள்ளையில் ஜெயலலிதா முன்னாள் அதிமுக அமைச்சர்களிடம் மிரட்டி வாங்கி வைத்திருந்த சொத்து ஆவணங்கள், பல கோடி மதிப்புள்ள தங்கம், வைரங்கள், ரொக்க பணம் மற்றும் சொத்து பத்திரங்கள் மாயமானதாக கூறப்படுகிறது. கொடநாடு பங்களா கொள்ளை தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதலுக்கு பிறகு கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு உள்பட 10 பேரை கைது செய்தனர். இதற்கிடையே கொடநாடு பங்களாவில் தங்கி ஜெயலலிதாவிற்கு கார் ஓட்டி வந்த கனகராஜ் கொள்ளை சம்பவம் நடந்த 4வது நாள் சந்தேகத்திற்கு இடமான வகையில் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அதற்கு அடுத்த நாள் கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். சயான் கைது செய்யப்படுவதற்கு முன்பு, கேரளா மாநிலம் திரிச்சூர் அருகே காரில் செல்லும் போது, நடந்த சாலை விபத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் அவரது மனைவி, மகள் உயிரிழந்தனர். இதனால் சந்தேகம் வலுத்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் முக்கிய குற்றவாளிகளான சயான், மனோஜ், திபு ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நாங்கள் வெறும் கூலி ஆட்கள் தான். எங்களையும் கொலை செய்ய முயற்சி நடப்பதாக கூறியிருந்தனர். அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்ததால் கொடநாடு கொள்ளை வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
இந்த வழக்கு தற்போது நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கொடநாடு கொள்ளை சம்பவம் நடந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விசாரணை ஆரம்பத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியான மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நடந்து வரும் இந்த வழக்கு, தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன், கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன், உறவினர் மகன், நேர்முக உதவியாளர் உட்பட 250 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.
தி.நகரில் உள்ள சகிகலா இல்லத்தில் சசிகலாவிடம் ேநற்று முன்தினம் காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 5.30 மணிக்கு முடிந்தது. அதைதொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று காலை 10 மணிக்கு சசிகலாவிடம் தொடங்கிய விசாரணை மதியம் 2 மணிக்கு முடிந்தது. இரண்டு நாட்களாக நடந்த ஒன்பதரை மணி நேரம் நடந்த விசாரணையில் சசிகலாவிடம் கொடநாடு கொள்ளை தொடர்பாக 200க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் ரகசிய அறையில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் இருந்ததா, சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த உங்களுக்கு கொடநாடு கொள்ளை, கொலை குறித்து முதலில் யார் உங்களுக்கு சொன்னது, கணினி ஆபரேட்டர் தினேஷ் தற்கொலைக்கு செய்து கொள்ளும் வகையில் எந்த விதமான ஆவணங்களை கணினியில் பராமரித்து வந்தார். தினேஷ் தற்கொலையில் அரசியல் அழுத்தம் ஏதேனும் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் யார் மீது சந்தேகம் உங்களுக்கு உள்ளது, கொடநாடு முழு விபரங்கள் அறிந்த அதிமுக மூத்த நிர்வாகிகள் யார் யார்? அரசியல் தொடர்பாக ஜெயலலிதாவை கொடநாடு பங்களாவில் அடிக்கடி சந்தித்த அதிமுக மூத்த அமைச்சர்கள் யார்? மூத்த அமைச்சர்கள் மீது ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு சசிகலா அளித்த பதிலை வாக்குமூலமாகவும், விடியோவாகவும் போலீசார் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தனி நபர் யாரும் உயர் பாதுகாப்புடன் இருக்கும் கொடநாடு பங்களாவிற்குள் செல்ல முடியாது. அப்படி இருக்கையில் கொடநாடு குறித்து முழு விபரங்கள் அறிந்த நபர்கள் மூலம் தான், குற்றவாளிகளாக கைது ெசய்யப்பட்டுள்ள சயான், மனோஜ். திபு ஆகியோர் சென்று இருக்க முடியும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்படி சென்று இருந்ததாலும், ஜெயலலிதா பயன்படுத்திய அறை மற்றும் சசிகலா பயன்படுத்திய அறைகள் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த 2 அறைக்குக்கும் செல்ல வேண்டும் என்றால் ‘ரகசிய குறியீடுகள்’ பதிவு செய்ததால் மட்டுமே அறையின் கதவுகள் திறக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி அனைத்து விபரங்களையும் தெரிந்த நபர்கள் உதவியுடன் தான் கொடநாடு கொள்ளை நடந்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதனால் தான் இந்த கொள்ளையின் பின்னணியில் பெரிய அளவில் அரசியல் இருப்பதாக இதுவரை நடந்த விசாரணையில் போலீசார் உறுதி செய்துள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் சசிகலாவிடம் நடந்த 2 நாள் விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவை தொடர்ந்து இந்த வழக்கில் அதிமுகவின் முன்னாள் மூத்த அமைச்சர்கள் மற்றும் மேற்கு மண்டல முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அனைவரும் முக்கிய பிரமுகர்கள் என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக நீதிமன்றத்தில் முன் அனுமதி பெறுவதற்கான பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
சசிகலாவிடம் நடத்தப்பட்ட விசாரணை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், குற்றவாளிகளை அடையாளம் கட்டக்கூடியதாக வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. அதேநேரம், கொடநாடு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் சசிகலாவை தொடர்ந்து அடுத்து யாரிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இதனால் அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் சிலர் கலக்கத்தில் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகிஉள்ளது.
சசிகலா என்ன சொன்னார்?… வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பரபரப்பு பேட்டி
கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நடந்த விசாரணை குறித்து அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களிடம் பேசியதாவது:
விசாரணையில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சசிகலா சரியாக பதில் சொன்னார். இறந்த காவலாளியிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சசிகலா பதில் அளித்தார். கொடநாடு பங்களாவில் கதவுகள் உடைக்கப்பட்டு காவலாளி கொலை செய்யப்பட்ட நிலையில், தடயங்கள் ஏதும் அழிந்து விடக் கூடாது என்பதற்காக சசிகலா கொடநாடு பங்களாவிற்கு செல்லாமல் இருந்தார். சசிகலா கொடநாடு பங்களாவிற்கு செல்வதற்கு தடை ஏதும் இல்லை. இருந்தாலும் விசாரணை நடப்பதால் அவர் அங்கு செல்ல வில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.