அஜித்தின் ‘துணிவு’, விஜய்யின் ‘வாரிசு’ இரண்டு படங்களும் நேற்று (ஜனவரி 11) வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதில் இரண்டு படங்களுக்குமான முதல் நாள் வசூல் குறித்து பார்ப்போம்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். நேற்று வெளியான இப்படத்தின் சிறப்புக் காட்சிகள் நள்ளிரவு 1 மணி அளவில் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டன. மேலும், தமிழகத்தில் அஜித்தின் ‘துணிவு’ சற்று அதிக திரையரங்குகளில் திரையிடபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், படம் வெளியான முதல் நாளான நேற்று தமிழகம் முழுவதும் ‘துணிவு’ ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமன் இசையமைத்திருந்த இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தில் முதல் காட்சி நேற்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில், முதல் நாளான நேற்று படம் ரூ.17 கோடி முதல் ரூ.19 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.