தீவிர அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னை கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொள்வதற்காக ஸ்விட்சர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு விசா வழங்கக்கூடாது என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார் அவரது தோழி. டெல்லியைச் சேர்ந்த அந்த நபரின் பிடிவாதமும், அவரது தோழியின் போராட்டமும் கவனத்தைப் பெற்றுள்ளது.

கருணைக் கொலையை புரிந்து கொள்வோம்: நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டு துன்புறுவோரையும், இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்படும் நோயாளிகளையும் அவர்களது உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நோயாளிகளை துன்பம் இல்லாமல் உயிரைப் போக்குவது கருணைக் கொலை எனப்படுகிறது. கருணைக் கொலை செய்வதை அதற்காக, நடவடிக்கை எடுப்பது, நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்று இருவகையாக பிரித்துள்ளனர்.

நடவடிக்கை எடுப்பது: மருத்துவர்களோ அல்லது வேறு நபர்களோ (மருத்துவ உதவியாளர்கள்) நோயாளி மரணமடைவதற்காக திட்டமிட்டு (விஷ ஊசி போடுவது) செய்வது. நடவடிக்கை எடுக்காமல் இருப்பது: நோயாளி உயிர் வாழ்வதற்காக செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருப்பது அல்லது செய்து கொண்டிருப்பதை நிறுத்துவது. செயற்கை சுவாசத்தை நிறுத்துவது.

டெல்லி வழக்கு: கருணைக் கொலை தொடர்பான நடைமுறைகள் இப்படியிருக்க, டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்விட்சர்லாந்தில் தன்னை கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொள்ள திட்டமிட்டு மருத்துவ சிகிச்சைக்கு செல்வதாகக் கூறி விசா பெற்றுள்ளார். ஆனால், அவர் ஸ்விட்சர்லாந்தில் கருணைக் கொலைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளவே செல்கிறார் எனக் கூறி அவரது தோழி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ”எனது நண்பருக்கு மையால்ஜிக் என்செஃபாலோமயலிட்டிஸ் என்ற நோய் பாதிப்புள்ளது. இந்த நோயின் காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அவர் படுக்கை நோயாளியாக மாறியுள்ளார். அவரால் வீட்டிற்குள்ளேயே சில அடிகள் மட்டுமே நடக்க முடியும். இதனால் விரக்தியில் உள்ள என் நண்பர், ஸ்விட்சர்லாந்தில் கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொள்வதற்காக பயணப்பட திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார். ஆனால், இங்கு தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்கையில் மருத்துவ சிகிச்சைக்காக செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

என் நண்பருக்கு வயதான பெற்றோர் உள்ளனர். அவர்கள் மகனின் முடிவை நினைத்து ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர். என் நண்பர் கரோனாவுக்கு முன்பு வரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் அவர் வீட்டில் இருந்து சிகிச்சைகளைப் பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை செலவுகளை மேற்கொள்வதில் எவ்வித பண நெருக்கடியும் இல்லை. ஆகையால் அவர் இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்திக் கொண்டு உடல்நிலையை முன்னேற்ற முயற்சி செய்ய வேண்டும் என்று பெற்றோர், நண்பர்கள் விரும்புகிறோம். ஆகையால், அவரது விசாவுக்கு குடியேற்று அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது என்று கோருகிறேன்” என்று கோரியுள்ளார்.