ஜவுளி மற்றும் அதைச் சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க ஜவுளி உற்பத்தியாளர்களின் கோரிக்கையைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழகத்தில் ஜவுளித் தொழில் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற ஜவுளி உற்பத்தியாளர்களின் கோரிக்கையைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டப் பகுதிகளில் ஜவுளித் தொழில், பின்னலாடைத் தொழில், நூற்பாலைத் தொழில் ஆகியவை பிரதான தொழில்களாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக ஒரு நாளைக்கு சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பில் ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது. ஜவுளி உற்பத்தியில் சுமார் 50 லட்சம் பேர் விசைத்தறி தொழிலையும், சுமார் 5 லட்சம் பேர் கைத்தறி தொழிலையும் நம்பி வாழ்கிறார்கள். இவர்கள் கரோனா காலத்தில் தொழிலில் ஈடுபட முடியாமல் சிரமப்பட்டார்கள்.

ஜவுளி மற்றும் அதைச் சார்ந்த தொழில்களுக்கு நூல்தான் மூல ஆதாரமாக இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 250 ரூபாயாக இருந்த ஒரு கிலோ நூல் விலை மாதம் மாதம் ரூபாய் 10, ரூபாய் 20 எனப் படிப்படியாக உயர்ந்து இப்போது கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ நூல் ரூபாய் 350க்கு விற்கப்படுகிறது. இந்த நூல் விலை உயர்வால் ஜவுளி மற்றும் அதைச் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பருத்தியில் தயாராகும் 50 கிலோ கொண்ட நூலின் ஒரு சிப்பத்தின் விலை ரூபாய் 9 ஆயிரமாக இருந்தது. இந்த விலை தொடர்ந்து உயர்ந்து தீபாவளி வரை ஒரு சிப்பத்திற்கு ரூபாய் 4 ஆயிரம் வரை உயர்ந்து ஒரு சிப்பம் நூல் ரூபாய் 13 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. நூல் விலையேறினாலும் சிரமப்பட்டு தீபாவளி பண்டிகை வரை தொழிலை நடத்தி வந்த வேளையில் இப்போது மீண்டும் ஒரு சிப்பம் நூலின் விலை ரூபாய் ஆயிரம் உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் மிகவும் கவலை அடைந்துள்ளனர். காரணம் நூல் விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் நலன் கருதி அதனை வாங்கித் தொழில் செய்தாலும் பெருத்த நஷ்டம் ஏற்படுவதாக ஜவுளித் தொழிலில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நூல் விலையைக் குறைக்க ஜவுளித் தொழிலில் ஈடுபடுபவர்கள் கோரிக்கை வைத்தபோதும் இன்னும் விலை குறையவில்லை. நூல் விலை உயர்வால் ஜவுளி மற்றும் அதைச் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள், அவர்களின் குடும்பம் என ஒரு கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். ரூபாய் 9 ஆயிரத்துக்கு விற்ற ஒரு சிப்பம் கொண்ட நூல் விலை கடந்த 50 நாட்களில் படிப்படியாக உயர்ந்து இப்போது ரூபாய் 14 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.

கடந்த காலங்களில் இந்த அளவிற்கு நூல் விலை உயர்ந்ததில்லை. இந்நிலையில் கைத்தறி, விசைத்தறி என ஜவுளி மற்றும் அதைச்சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் நூல் விலை குறைக்கப்பட்டால் மட்டுமே தொழிலைத் தொடர முடியும் என்றும் இல்லையென்றால் தொழிலை இழந்து, வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

எனவே மத்திய, மாநில அரசுகள் நூல் விலை குறைய உடனடி நடவடிக்கை எடுத்து ஜவுளித் தொழிலையும், அதைச் சார்ந்த தொழில்களையும் பாதுகாத்து உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், அவர்களின் குடும்பம் ஆகியோர் நலன் காக்க வேண்டும்”.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.