கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தலைதூக்கியுள்ளதால் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவோடு சேர்ந்து கொரோனாவின் திரிபான ஒமிக்ரானும் பரவி கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பாக்கப்பட்டது. அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருந்த சூழலில் தற்போது தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.