அபுதாபியில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரியும், விக்கெட்டும் முன்களப் பணியாளர்களுக்கு நிதியுதவியாக வழங்கப்பட உள்ளது.

ஐபிஎல் டி20 போட்டியின் 14-வது சீசனின் 2-ம் பகுதி நேற்று தொடங்கியது. இன்று நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி மோதுகிறது. இந்த முறை ஆர்சிபி அணி புதிய முயற்சியை நடைமுறைப்படுத்த உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் டி20 போட்டியில் ஆர்சிபி அணி, பசுமைச் சூழலை வலியுறுத்தி பச்சை நிற ஜெர்ஸியில் களமிறங்கி விளையாடுவார்கள், பூமியை வெப்பமயமாக்கலில் இருந்து காப்போம், ஆரோக்கியமாக வைத்திருப்போம் என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

https://www.facebook.com/METROPEOPLENEWS/
Captain Virat Kohil With New Jersery…

ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்துவரும் கரோனா வைரஸுக்கு எதிராக அனைவரும் போராடி வருகின்றனர். இதில் முன்களப் பணியாளர்களின் பங்களிப்பும், சேவையும் அளப்பரியது.

ஆதலால், ஐபிஎல் 14-வது சீசனின் 2-ம் பகுதியில் கரோனா முன்களப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நீல நிற ஜெர்ஸியை அணிந்து ஆர்சிபி வீரர்கள் இன்று களமிறங்குகின்றனர். வீரர்கள் அணிந்து விளையாடிய நீல நிற ஜெர்ஸி பின்னர் ரசிகர்களிடம் ஏலம் விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகை ஏழைகளுக்கும், விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த உதவியாக வழங்கப்பட உள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸர், பவுண்டரி, எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஸ்பான்ஸர்கள் அளிக்கும் வெகுமதி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக ஆர்சிபி அணி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நாங்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸர், பவுண்டரி, வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் முன்களப் பணியாளர்களுக்கு ஸ்பான்ஸர்கள் நன்கொடை வழங்குவார்கள்” எனத் தெரிவித்துள்ளது.