சென்னை: சென்னையில் நடைபெறும் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை, சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள், பிரமுகர்கள் பயணம் செய்யும் வழித்தடங்கள் சிகப்பு மண்டலமாக (Red Zone) அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று சென்னைப் பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்: முதல் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் 31.01.2023 முதல் 02.02.2023 வரை சென்னை மற்றும் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்த ஜி20 மாநாட்டில் 29 வெளிநாடுகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல், தாஜ் கன்னிமாரா, ஹயாத், தாஜ் கிளப் ஹவுஸ் ஆகிய இடங்களில் தங்கியும் ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் (IIT Research Park) நடைபெறும் கருத்தரங்கத்தில் பங்கேற்க உள்ளனர். மேலும் 01.02.2023 அன்று மேற்படி பிரதிநதிகள் அனைவரும் மகாபலிபுரத்தில் உள்ள UNESCO World Heritage Sites-ல் நடைபெறும் நிகழ்விலும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது.

எனவே, 31.01.2023 முதல் 02.02.2023 வரையில் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கூறிய தங்கும் இடங்கள், விழா நடைபெறும் இடங்கள் மற்றும் மேற்படி பிரமுகர்கள் பயணம் செய்யும் வழித்தடங்கள் சிகப்பு மண்டலமாக (Red Zone) அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் 31.01.2023 முதல் 02.02.2023 வரையில் டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.