விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து முன்னணி சார்பில், மாநிலம் முழுவதும் 1.25 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடப்புஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 10-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்துமுன்னணி அமைப்பின் சார்பில், மாநிலம் முழுவதும், 1.25 லட்சம்இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தப்படும். விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவதற்கு இந்த அரசு ஒத்துழைப்பு அளித்து, அனுமதி வழங்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியன்று சிலைகள் வைக்க அரசு தற்போது வரை அனுமதி அளிக்கவில்லை. அரசு அனுமதிக்கவில்லை என்றால்கூட விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவோம். ஆலயங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு திட்டமிட்டு செய்யப்படுகிறது. கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு குறித்து அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.