அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் மூன்றாவது பாடலான ”கேங்ஸ்டா” இன்று மாலை வெளியாக உள்ளது.
முன்னதாக, அஜித்தின் துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த மாதம் 9-ம் தேதி வெளியானது. இரண்டு கோடி பார்வையாளர்களைக் கடந்து உலக அளவில் இந்தப் பாடல் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், மூன்று தினங்கள் முன் இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘காசே தான் கடவுளடா’ பாடல் வெளியானது. இதற்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இதனிடையே, இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ”கேங்ஸ்டா” என்னும் மூன்றாவது பாடல் இன்று வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருக்கிறார். முன்னதாக இந்த அறிவிப்பை வித்தியாசமாக வெளியிட்டுள்ளார் போனி கபூர். வழக்கமாக பாடலின் தலைப்பு மற்றும் தேதி மட்டுமே அறிவிக்கப்படும். ஆனால், இம்முறை பாடலின் வரிகளையும் அவர் வெளியிட்டுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது.