கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை உள்ள 53 கிராமங்களில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது என எஸ்பி சரோஜ் குமார் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பரில் காவல் நிலையங்களில் சேகரித்த தகவல் படி ஊத்தங்கரை உட்கோட்டத்தில் கஞ்சா விற்பனை இல்லை.

பர்கூர், கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் தலா 5 கிராமங்களிலும், ஓசூர் உட்கோட்டத்தில் 18 கிராமங்களிலும், தேன்கனிக் கோட்டை உட்கோட்டத்தில் 22 கிராமங்களிலும் குறைந்த அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. மேலும், கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கண்டறியப் பட்ட குருவி நாயனப் பள்ளி, வரமலை குண்டா உள்ளிட்ட 31 கிராமங்கள் மற்றும் குறைந்த அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கண்டறியப்பட்ட 22 கிராமங்களில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இக்கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் 20 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், கஞ்சா விற்பனையைத் தடுக்க இம்மாதம் 112 பேர் மீது வரலாற்று பதிவேடு தொடங்கப் பட்டுள்ளது. மாவட்டத்தில் கஞ்சா விற்பனை இருந்தால் பொதுமக்கள் மாவட்ட கண்காணிப்பாளரை 94454 37356 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.