விரைந்து திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என பாரத் பேவின் முன்னாள் மேலாண் இயக்குநர் அஷ்னீர் குரோவர் கருத்து தெரிவித்துள்ளார். அவரிடம் உங்களது வியாபார ரீதியான பயணத்திற்காக 20+ வயதுகளில் நீங்கள் கற்றதை பகிரவும் என பாட்காஸ்ட் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குதான் அவர் இப்படி பதில் சொல்லி உள்ளார். அவரது அட்வைஸ் நெட்டிசன்கள் மத்தியில் கருத்து முரணை ஏற்படுத்தி உள்ளது.

‘தி ரன்வீர் ஷோ’ எனும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் இதனை பகிர்ந்துள்ளார். அவரது கருத்துக்கு நெட்டிசன்கள் சிலர் ஆதரவாகவும், எதிராகவும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

“தாமதமாகத் திருமணம் செய்து கொள்பவர்கள், திருமணமே செய்து கொள்ளாதவர்கள், திருமணம் செய்து கொண்டும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பவர்கள் மீது எனக்கு ஒரு பார்வை உண்டு. அவர்கள் அனைத்தையும் தள்ளிப்போடுகிறார்கள் என எண்ணுவேன். ஆண் மற்றும் பெண் என எல்லோருக்குள்ளும் பயோலாஜிக்கல் கிளாக் இருக்கும். அதாவது அவர்கள் விரைந்து திருமணம் செய்து கொண்டு பிள்ளையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வாழ்வில் பெரிய விஷயங்களை செய்யலாம்.

ஆதலால் 20+ வயதை ஸ்மார்டாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வயதில் வாழ்க்கை துணையை தேர்வு செய்து, அவர்களை திருமணமும் செய்து கொள்ள வேண்டும். அது வாழ்வில் ஒரு அர்த்தத்தை கொடுக்கும். ஒரு இலக்கை நோக்கிய பயணத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் உங்களை நம்பி ஒரு குடும்பம் உள்ளது என்ற பிடிப்பு ஏற்படும். அதன் ஊடாக ஊக்கமும் கிடைக்கும்” என அவர் தெரிவித்துள்ளார். இதோடு வாழ்வில் கல்வியும் அவசியம் என அவர் சொல்லி உள்ளார்.