அரசுப் பேருந்து ஒரு கி.மீ. ஓடினால், போக்குவரத்துத் துறைக்கு ரூ.59.15 நஷ்டம் ஏற்படுகிறது என, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

“தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வாகன வரி மாற்றி அமைக்கப்படவில்லை. கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை விடத் தமிழகத்தில் வாகன வரி குறைவாக உள்ளது. மகளிருக்கு இலவசப் பேருந்து திட்டம் கொண்டுவருவதற்கு முன்பே போக்குவரத்துத் துறையில் நஷ்டம் உள்ளது.

டீசல் விலைக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்தாததும் போக்குவரத்துத் துறையின் நஷ்டத்துக்குக் காரணம். ஒரு அரசுப் பேருந்து ஒரு கி.மீ. ஓடினால், போக்குவரத்துத் துறைக்கு ரூ.59.15 நஷ்டம் ஏற்படுகிறது.

அதேபோன்று, மின்துறையில் ஒரு யூனிட் வாங்கிப் பயன்படுத்தினால், ரூ.2.36 நஷ்டம் ஏற்படுகிறது. மின்துறையும் போக்குவரத்துத் துறையும் ரூ.2 லட்சம் கோடி கடன் வைத்துள்ளன”.

இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.