கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடக அமைச்சரவை மற்றும் கரோனா தடுப்பு நிபுணர் குழுவின் ஒப்புதலின் பேரிலேயே வரும் 10ம் தேதி மாநிலத்தில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு, சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை 5 நாட்கள் வரை மட்டுமே பொது இடங்களில் வைக்க‌ வேண்டும். ரசாயனம் கலந்த சிலைகளை வைக்க அனுமதி கிடையாது. பொது இடங்களில் வைக்கப்படும் சிலையின் உயரம் 4 அடிக்கு மிகாமலும், வீடுகளில் 2 அடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி போன்ற நகரங்களில் ஒரு வார்டுக்கு ஒரு இடத்தில் மட்டுமே சிலை வைக்க வேண்டும். அதிகபட்சமாக 50-க்கு 50 அடி என்ற அளவிலேயே பந்தல் அமைக்க வேண்டும். அங்கு அதிகபட்சமாக‌ 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். எவ்வித‌ கலை நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதி இல்லை. விழா குழுவினர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்க வேண்டும். சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லாமல் அருகிலுள்ள ஏரிகளில் மட்டுமே கரைக்க வேண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.