முப்படைகளின் தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நஞ்சப்பசத்திரம் பகுதியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில்ராணுவ கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு, விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதன் பின்னர், அந்தப் பகுதியிலிருந்து ராணுவ கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது, ஏராளமான சுற்றுலா பயணிகள் விபத்து ஏற்பட்ட இடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர்.

இந்நிலையில், தனிப்பட்ட முறையில் உதகை வந்த தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி, நேற்று ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நஞ்சப்பசத்திரம் பகுதியில் அஞ்சலிசெலுத்தினார். இதற்காக உதகையிலிருந்து சாலை மார்க்கமாக குன்னூர் நஞ்சப்பசத்திரம் வந்தார்.

ஆளுநர் வருகையையொட்டி நஞ்சப்பசத்திரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று மாலை சுமார் 4.30 மணி அளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் வந்தார்.

எஸ்.பி. விளக்கம்

அங்கு வைக்கப்பட்டிருந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் உயிரிழந்த 12 வீரர்களின் புகைப்படங்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பின்பு, மாவட்ட எஸ்.பி. ஆஷிஸ் ராவத், கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம் ஆகியோரிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். ஆளுநர் இன்று உதகையிலிருந்து சென்னை திரும்புகிறார்.