சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் குடியிருப்பவர்களை அரசு பாதுகாக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சின்னதுரை பேசும்போது, “பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். நீண்டகாலம் பணியாற்றும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம மக்களுக்கு அடிமனைப் பட்டா வழங்க வேண்டும்.

நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகளை காரணம் காட்டி, வீடுகள் இடிக்கப்படும் மக்களைப் பாதுகாக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

3 ஆயிரம் வீடுகள்…

சென்னை மாநகராட்சி 194-வது வார்டு ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் 3 ஆயிரம் வீடுகளை இடிக்க முயல்வது சரியல்ல. அவர்கள் குடியிருப்பது நீர்நிலை புறம்போக்கு அல்ல. இது தொடர்பாக ஒரு குழு அமைத்து, பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். மேலும், அங்கு குடியிருப்போருக்கு அடிமனைப் பட்டா வழங்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “பெத்தேல் நகர் பிரச்சினை பெரும் பிரச்சினைதான். இதில் நீதிமன்ற உத்தரவும் உள்ளது.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளோம்.

அவர்கள் வசிக்கும் பகுதியில் நீர்நிலைப் புறம்போக்கு 200 ஏக்கருக்கும் மேல் உள்ளது. எனினும், அங்கு குடியிருப்பவர்களை அரசு நிச்சயம் பாதுகாக்கும்.

அரசு திட்டமிட்டு, அவர்களை வெளியேற்ற நினைப்பதுபோல இந்தப் பிரச்சினையைப் பேசி, அவையில் பதிவு செய்வது பொருத்தமாக இருக்காது. அதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து எம்எல்ஏ சின்னதுரை பேசும்போது, “அமைச்சரின் விளக்கத்துக்கு நன்றி. அதேநேரத்தில், இந்தப் பிரச்சினையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என்றார். தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.