தமிழ்நாட்டுக்கு ரூ.4,244 கோடி அளவுக்குத்தான் ஜிஎஸ்டி நிலுவைத்தொகை பாக்கி உள்ளது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்குமாறு மாநிலங்களவையில் திமுக கோரிக்கை வைத்துள்ளது. 2020ல் இருந்து 2023 வரை தர வேண்டிய ரூ.10,879 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க பி.வில்சன் வலியுறுத்தினார். உறுப்பினர் வில்சன் கேள்விக்குப் பதிலளித்த ஒன்றிய  நிதி அமைச்சர் நிர்மலா, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.10,000 கோடி என்பதை ஏற்க மறுத்துவிட்டார்.

தமிழ்நாட்டுக்கு ரூ.4,244 கோடி அளவுக்குத்தான் ஜிஎஸ்டி நிலுவைத்தொகை பாக்கி உள்ளதாக நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். ஒன்றிய அரசு வழங்கிய நிதியை பயன்படுத்தியது குறித்த சான்றை தமிழகம் வழங்கினால் தான் நிதியை விடுவிக்க முடியும். 2022 ஜூன் மாத அளவில் ஜிஎஸ்டியால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட ரூ.1,200 கோடி மட்டுமே தர வேண்டி உள்ளது. தமிழ்நாடு நிதியை பயன்படுத்தியது தொடர்பான அறிக்கை 10 நாட்களுக்கு முன்பே ஒன்றிய அரசுக்கு கிடைத்துள்ளது. நிதியை பயன்படுத்தியது தொடர்பான தமிழக அரசின் அறிக்கையை ஆய்வு செய்த பிறகே நிதி ஒதுக்கீடு பற்றி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.