பஞ்சாப் ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப்பில் அபார வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. புதிய முதல்வராக பக்வந்த் மான் நேற்று (மார்ச் 16) தனது பொறுப்பேற்றுக்கொண்டார். பஞ்சாப்பில் பெற்ற வெற்றியின் காரணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கிடைத்துள்ளது.

இந்தப் பதவிக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் பஞ்சாப் சார்பில் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள ஐந்து பேரின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளது.

இதனால் இந்த ஐந்து இடங்களுக்கும் பெரும்பான்மை தொகுதிகளை கொண்டுள்ள ஆம் ஆத்மிக்கே கிடைக்கும் நிலை உள்ளது. அதன்படி, ஐந்து எம்.பி.க்களில் ஒருவராக ஹர்பஜன் தேர்வு செய்யப்படுவார் என்று ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஏற்கெனவே ஹர்பஜன் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் உள்ளார். இப்போது கூடுதலாக அரசியல் பதவியும் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக. மார்ச் 10 அன்று, ஆம் ஆத்மி வெற்றிபெற்றதை அடுத்து “நமது புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள எனது நண்பர் பக்வந்த் மான்க்கு வாழ்த்துக்கள்… பகத் சிங்கின் வழியில் புதிய முதல்வராக அவர் பதவியேற்கப் போகிறார் என்பதைக் கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று ஹர்பஜன் சிங் குறிப்பிட்டு இருந்தது கவனிக்கத்தக்கது.