நாம் பேசுவதற்கு எவ்வளவோ விசயம் உள்ளது. எந்த தர்க்கமும் இன்றி 36 சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. இது குறித்துதான் நாம் பேசவேண்டும்

பாஜக மாநில  பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவனுக்கு எதிராக பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் சமூக குப்பை என்றும் வீடியோவை வெளியிட்ட நபரை கைது செய்திருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், யாரும் செய்யாததையா  ராகவன் செய்துவிட்டார் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவின் மாநில  பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவனுக்கு பாலியல் குற்றச்சாட்டும் அது தொடர்பான வீடியோவும் இடம்பெற்ற காணொளி  சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோ விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தான் வகித்த மாநில பொதுச்  செயலாளர் பதவியை  கே.டி. ராகவன் ராஜினாமா செய்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க பாஜகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “ இது சமூக குப்பை, ராகவனின் அனுமதியில்லாமல் அவரது தனிப்பட்ட இடங்களில் வீடியோ வைத்து எடுப்பது என்பதுதான் சமூக அவலம். இந்த வீடியோவை வெளியிட்ட நபரை கைது செய்திருக்க வேண்டும்.

உலகில் எங்குமே நடக்காத ஒன்றை அவர் செய்துவிட்டார் என்று காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். சட்டப்பேரவையிலேயே ஆபாச படம் பார்த்துள்ளனர். அதையெல்லாம்தான் தவறு. அதை விட்டுவிட்டு, அவர் தனது அறையில் செய்ததை வீடியோ எடுத்து வெளியிடுவது கேடுகெட்ட சமுகம் ஆகிவிட்டதோ என எண்ண தோன்றுகிறது.யார் யாரோடு பேசுகிறார் என்பதை ஒட்டுக்கேட்பது, அதை பதிவு செய்வது வெளியிடுவது தவறு” என்று கூறியுள்ளார்.

மேலும், “நாம் பேசுவதற்கு எவ்வளவோ விசயம் உள்ளது. 6 லட்சம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு ஒத்திக்கு விடப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எந்த தர்க்கமும் இல்லாமல் 36 சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளதாக திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார். இது கொடுங்கோண்மையின் உச்சம். இது போன்ற விவகாரங்களைதான் நாம் பேசவேண்டும்” என்று குறிப்பிட்டார்.