நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோல் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், நீதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் முட்டத்தில் செயல்பட்டு வரும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் பனங்குடி, நரிமணம் மற்றும் கோபுராஜபுரம் கிராமங்களில் இருந்து சுமார் 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கடந்த 2017-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன், இந்நிறுவனத்தை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படாத நிலையில், விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, அரசிடம் நிலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தங்களது நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி நிலம் வழங்கிய சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் உரிய இழப்பீடு கோரி நாகூர் அருகே ஒரு மாத காலம் தொடர் போரட்டம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, போரட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், “ஒரு மாத கால தொடர் போராட்டம் நடைபெற்றால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “நிலம் அளித்தவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படும்” என உறுதியளித்தார்.

இதையடுத்து, இழப்பீடு கோரிய வழக்குகளின் முடிவுக்காக காத்திருக்காமல், போராட்டத்தில் ஈடுபடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இழப்பீடு கோரிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வரை, தங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது .

மேலும், நீதியின் மீது நம்பிக்கை வைத்து, நாள் முழுவதும் சாமியானவுக்கு கீழ் அமர்ந்து சிரமப்படாமல், விவசாயிகள் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.