ஹெச்டிஎப்சி நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களும் ஹெச்டிஎப்சி வங்கியுடன் விரைவில் இணையவுள்ளன. இந்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் இரு நிறுவனங்களின் பங்குகளும் இன்று அதிக ஏற்றம் கண்டன.

நாட்டின் மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமாக ஹெச்டிஎப்சி செயல்பட்டு வருகிறது. இதுபோலவே நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக ஹெச்டிஎப்சி விளங்கி செயல்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி ஹெச்டிஎப்சி பல்வேறு துறைகளில் தனித்தனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இதனால் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதுமட்டுமின்றி வர்த்தக வளர்ச்சியும் தடைபடுகிறது. இதனால் இந்த நிறுவனங்களை ஒன்றிணைக்க ஆலோசனைகள் நடைபெற்று வந்தன.

ஹெச்டிஎப்சி நிறுவனத்திடம் 6.23 லட்சம் கோடி ரூபாய் மத்தியிலான சொத்துக்களும், ஹெச்டிஎப்சி வங்கியிடம் 19.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் உள்ளன. ஹெச்டிஎப்சி வங்கியிடம் 6.8 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த இணைப்பு மூலம் இந்நிறுவனங்களின் மதிப்பு உயர்வது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பும் அதிகரிக்கும் என்பதால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஹெச்டிஎப்சி நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஹெச்டிஎப்சி நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனங்களையும் ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த இணைப்பு 2024 நிதியாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி, செபி மற்றும் பிற அரசு அமைப்புகள் ஒப்புதலுக்கு பின்பு இது முழுமையாக நடைமுறைக்கு வரும். ஹெச்டிஎப்சியின் 25 பங்குகளுக்கு ஹெச்டிஎப்சி வங்கியின் 42 பங்குகள் அடிப்படையில் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் பங்கு தாரர்களுக்கும் ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பிற்குப் பின்பு பங்குகள் பரிமாற்றம் செய்யப்படும்.

ஹெச்டிஎப்சி இணைப்பு அறிவிப்பு வெளியான நிலையில் ஹெச்டிஎப்சி பங்குகள் 15 சதவீதமும், ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 13.56 சதவீதமும் உயர்ந்துள்ளன. இன்றைய வர்த்தக உயர்வின் மூலம் இரு நிறுவனப் பங்குகளும் 52 வார அடிப்படையில் உயர்வை எட்டியுள்ளது.