கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியை ஆல்-டைம் கிரேட் என்றும், மெய்யான சாம்பியன் என்றும் போற்றியுள்ளார், மற்றொரு முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி. இதனை கொல்கத்தாவில் நடைபெற்ற ஸ்போர்ட் ஸ்டாரின் ஈஸ்ட் ஸ்போர்ட்ஸ் கான்கிளேவ் நிகழ்வில் அவர் பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த கேப்டன் என அறியப்படுகிறார் தோனி. கடந்த 2004-ல் அவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுக வீரராக களம் கண்டது கங்குலி தலைமையிலான இந்திய அணியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நடந்த அனைத்தும் வரலாறு. எதிர்வரும் 2023 ஐபிஎல் சீசனுக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

“அவர் மெய்யான சாம்பியன். ராஞ்சியில் இருந்து புறப்பட்டு வந்த அவர் இந்திய அணியின் ஆல்-டைம் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார். அவரது மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்திய அணியில் இடம்பிடிப்பது அரிதான ஒன்று. அவரை சூழ்ந்துள்ள வீரர்களுக்கு மாற்றத்தை கொடுத்தவர், அவர்களிடத்தில் நம்பிக்கையை விதைத்தவர்” என கங்குலி கூறியுள்ளார்.

கிரிக்கெட் எதிர்கொண்டு வரும் மாற்றம் மற்றும் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் குறித்தும் பேசியிருந்தார் கங்குலி.